தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கில் இந்துநாகரீம் மற்றும் சங்கீத பாட ஆசிரிய ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரப்படவேண்டும் – ரவிகரன்

வடக்கில் இந்துநாகரீம் மற்றும் சங்கீத பாட ஆசிரிய ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி வேண்டுகோள்; சமச்சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை சீர்ப்படுத்துமாறும் வலியுறுத்து.

பட்டதாரிகளைஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளபோதும், கர்நாடக சங்கீதம், இந்துநாகரீக பாடங்களுக்கான விண்ணப்பங்கள் வடமாகாணத்தில் இதுவரை கோரப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூயவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

கர்நாடக சங்கீத பாடத்திற்கு யாழ்ப்பாணத்தில் 81ஆசிரியர்கள் மிகையாக உள்ளபோதும் வன்னியில் 46ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதேபோல இந்துநாகரீக பாட ஆசிரியர்களும் வடமாகாணத்தில் சமச்சீரற்ற விதத்தில் சமச்சீரற்ற விதத்தில் பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே வடக்குமாகாணத்தில் நிலவும் இவ்வாறான சமச்சீரற்ற ஆசிரியர் வளப்பரவலாக்கத்தை சீர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் தொடர்ந்தும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் 17.02.2026நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்தின் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான போட்டிப்பரீட்சைக்கான அறிவித்தல் கடந்த 2026.02.02 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி ஊடாக வெளியாகியது.

கர்நாடக சங்கீதம், இந்து நாகரீக பாடங்களில் திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வடமாகாணத்துக்கான விண்ணப்பம் கோரப்படாதிருப்பதை கல்வி அமைச்சரின் மேலான கவனத்துக்கு இப்பேரவை ஊடாக கொண்டுவருகிறேன்.

மாகாண அடிப்படையில் இந்துநாகரீக பாடத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட 125 ஆசிரியர்களில் 93 ஆசிரியர்களே தற்போதிருப்பதாக வடமாகாணக் கல்வித்திணைக்களத்தின் புள்ளிவிபரம் சுட்டிக்காட்டுகிறது.

கிட்டத்தட்ட இந்து நாகரீக பாடத்தில் வடமாகாணத்தில் 75சதவீத ஆசிரியர்களே காணப்படுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் 89சதவீத ஆசிரியர்கள் காணப்படுகின்ற போதும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் 50சதவீத ஆசிரியர்கள், வவுனியா மாவட்டத்தில் 64சதவீத ஆசிரியர்களே உள்ளனர்.

மேற்படியான புள்ளிவிபரம் வடமாகாணத்தில் சீரற்ற ஆசிரியர் வளப்பரவலாக்கத்தை வெளிக்காட்டுகிறது.

வன்னிமாவட்டத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்கள் மேற்படி பாடத்திற்கான ஆசிரியர் பற்றாக்குறையை 50% கொண்டிருக்கும் நிலையில் மேற்படி பாடத்துக்குரிய ஆட்சேர்ப்பு ஏன் வடமாகாணத்திற்கு ஏற்படுத்தப்படவில்லை?

வடமாகாணத்தில் கர்நாடக சங்கீதத்திற்குரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆளணி 476. தற்போதுள்ள ஆளணி 506.

அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 132சதவீதமான கர்நாடகசங்கீத ஆசிரியர்களும், கிளிநொச்சி 92சதவீதமான ஆஙிரியர்களும், மன்னார் 72 சதவீதமான ஆசிரியர்களும், வவுனியா 60சதவீத ஆசிரியர்களும முல்லைத்தீவு 85சத வீத ஆசிரியர்களும் காணப்படுகின்றனர்.

கர்நாடக சங்கீத பாடத்திற்கு வடமாகாணத்தில் 30 ஆசிரியர்கள் மிகையாக உள்ள போதும், யாழ்ப்பாணத்தில் மட்டும் 81 ஆசிரியர்கள் மிகையாக உள்ளனர். ஆனால் வன்னிப்பெருநிலப்பரப்பில் உள்ள 6 கல்வி வலயங்களில் 46 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இது வன்னிமாவட்ட பிள்ளைகளுக்கு நேரும் அநீதி இல்லையா!

கௌரவ கல்வி அமைச்சர் அவர்களே! எங்கள் பிள்ளைகள் பாடத்திற்கு ஆசிரியர்கள் இன்றி கலைத்திறன் பெற வழியற்று இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் 81 ஆசிரியர்கள் மிகையாக உள்ளார்கள். இந்த சமச்சீரற்ற வளப்பரவலாக்கத்திற்கு உங்கள் விரைவான தலையீட்டைக் கோரிநிற்கின்றேன்.

இந்நிலையில் 2026 இல் நீங்கள் மேற்கொள்ளவுள்ள பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பிலும் கர்நாடக சங்கீத பாடத்திற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கோரப்படவில்லை.

முல்லைத்தீவில் 8 ஆசிரியர்கள் தேவையாக உள்ள நிலையில் 16 இற்கும் மேற்பட்ட கர்நாடக சங்கீத பட்டதாரிகள் முல்லைத்தீவில் மட்டும் உள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேவையை முல்லைத்தீவு மாவட்ட ஆளணியைக் கொண்டே நிறைவு செய்ய இயலுமாக உள்ள போதும் தங்கள் அதிவிசேட வர்த்தமானி அதற்கு இடமளிக்கவில்லை.

கௌரவ பிரதமர் அவர்களே!

தயவு செய்து வன்னி மாவட்டம் சமச்சீரற்ற வளப்பரம்பலால் தொடர்ந்தும் வஞ்சிக்கப்பட இடமளிக்கவேண்டாம்.

விரைவாக வடமாகாணத்தில் நிலவும் சீரற்ற ஆசிரியர் வளப்பரம்பலை சீராக்குங்கள். குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகுதியாக தேங்கியுள்ள ஆசிரிய ஆளணியை யாழ்ப்பாணத்திற்குள் தீவக கல்வி வலயத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கு வெளியே உள்ள ஏனைய கல்வி வலயங்களுக்கும் பரவலாக்க வகை செய்யுங்கள். வன்னி மாவட்ட பிள்ளைகளுக்கு சமத்துவ கல்விக்கான வாய்ப்பை வழங்க வகை செய்யுங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

Leave a Comment