தாயகச் செய்தி 

மகாவலி அதிகார சபைக்கு மரண தண்டனை வழங் கப்பட வேண்டும் – ரவிகரன் எம்.பி

திரிவச்சகுளத்தில் அடர்வனங்கள் அழிக்கப்பட்ட விவகாரம்; மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து.

மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்த விவகாரத்தில் மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா மாவட்டசெயலகத்தில் 12.03.2026நேற்று இடம்பெற்ற விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் தலைமையிலான
விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வவுனியா வடக்கு பிரசேசெயலாளர் பிரிவிலுள்ள திரிவச்ச குளம் என்னும் இடத்தில் பெரும்பான்மை இனத்தவர்களால் சட்டவிரோதமாக பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டன.

இலங்கையின் சட்டத்தின்படி காடுகளை அழிப்பதெனில் உரிய அனுமதிகளைப் பெறப்படவேண்டும். ஆனால். திரிவச்சகுளம் பகுதியில் அனுமதிகள் எவையும் பெறப்படாமல் 600ஏக்கருக்கும் மேற்பட்ட அடர்வனங்கள் அழிக்கப்பட்டன.

மகாவலி அதிகாரசபை தனது ஆளுகைக்குட்பட்ட இடம் என உரிமைகோரும் பகுதியிலேயே இவ்வாறு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மகாவலி அதிகாரசபையின் ஆதரவோடுதான் திரிவச்சகுளம் பகுதியில் இவ்வாறு அடர்வனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஆனால் தமிழ் மக்கள் மண்வெட்டிப்பிடி வெட்டும்போது,காடழிப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நான்குவருடங்கள் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் இங்கு பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இத்தகைய பாரிய சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கு இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
அத்தோடு இவ்வாறு அடர்வனங்கள் அழிக்கப்பட்ட பகுதிக்கு அருகே உள்ள தமிழ்மக்களின் பூர்வீக திரிவச்சகுளத்தின் கீழான வயல்நிலங்களை பெரும்பான்மை இனத்தவர்கள் பத்துப்பேருக்கு ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு பகிர்ந்தளிக்கும் அத்துமீறல் செயற்பாட்டிலும் மகாவலி அதிகாரசபை ஈடுபட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக குறித்த தமிழ் மக்களின் பூர்வீக திரிவச்சகுளம் வயல் நிலங்களுக்கு அருகாகவுள்ள பாரிய அடர்வனங்களும் மகாவலி அதிகாரசபையின் துணையுடன் பெரும்பான்மை இனத்தவர்களால் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டவிரோத காடழிப்புச் செயற்பாடு தொடர்பில் நான் நேரடியாகப் பார்வையிட்டதுடன், குறித்த சட்டவிரோத காடழிப்புச் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகாவலி அதிகாரசபையிடம் வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால் அங்கு சட்டவிரோதமாக காடழிப்புச் செயற்பாட்டில் ஈடுபட்ட பெரும்பான்மை இனத்தவர்களுக்கெதிராக இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

சட்டவிரோத செயற்பாட்டில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கெதிராக மிகக் கடுமையான சட்டநடவடிககை எடுக்கப்படவேண்டும்.

இந்தவிடயத்தில் மகாவலி அதிகாரசபை பாரிய சட்டவிரோத செயற்பாட்டிற்கு ஆதரவாகச் செயற்பட்டிருக்கின்றது.

எனவே அமைச்சர் லால்காந்த இவ்வாறு சட்டவிரோத காடழிப்புச் செயற்பாட்டிற்கு ஆதரவாகச் செயற்பட்ட மகாவலி அதிகாரசபைக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த விடயத்தில் தற்போதய அரசாங்கம் நியாயமான முறையில் செயற்படுமெனவும், உரியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமெனவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

இந்த விடயத்தில் மகாவலி அதிகாரசபை மரணதண்டனைக்குரிய பாரிய குற்றச்செயலைச் செய்துள்ளது. பாரிய மரங்கள், பாரிய அளவில் அழிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு காடழிப்புச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமைக்கான ஆதாரங்களும் எம்மிடமுள்ளன.

எனவே இந்தவிடயத்தில் மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் – என்றார்.

அன்மைச் செய்தி

Leave a Comment