கேப்பாபிலவு மக்க ளின் காணிகளை விடுவிக்க வலியு றுத்திய ரவிகரன் அறிக்கை கோரியுள்ள ஜனாதிபதி செயலகம்
இராணுவத்தின் பிடியிலுள்ள கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி; காணிவிடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோரியுள்ள ஜனாதிபதி செயலகம்
முல்லைத்தீவு – கேப்பாபிலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 14.01.2026அன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் ஜனாதிபதி அனுர குமாரதிஸாநாயக்கவிற்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய, பாதுகாப்புப் பிரிவினரிடம் வினவுதல்களை மேற்கொண்டு கேப்பாபிலவு பிரதேசத்தில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விரிவான ஒரு அறிக்கையை உடனடியாக தமக்கு அனுப்பி வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி செயலகம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கடந்த 07.01.2026அன்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் முல்லைத்தீவு – கேப்பாபிலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், விடுவிக்கப்படாத மக்களின் காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், அந்த மக்களுக்கு வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த கூட்டத்தில் இவ்வாறு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட பொய்யான தகவலுக்கு உடனடியாக எதிர்ப்புத்தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேப்பாபிலவில் 55பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும் 4பேருக்குரிய 100ஏக்கர் மத்தியவகுப்புக்காணிகளுமாக மொத்தம் 59பேருக்குரிய 159.5ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கேப்பாப்புலவில் விடுவிக்கப்படவேண்டியுள்ளதாக ஜனாதிபதியிடம் உண்மைநிலையினை சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் கேப்பாபிலவு காணிவிடுவிப்பு விடயம்தொடர்பாக அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுரகுமார திசாநாயக்கவால் இதன்போது இராணுவத்தினரிடம் கோரப்பட்டிருந்தது.
இத்தகையசூழலில் கேப்பாபிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 159.5ஏக்கர் மக்களின் காணிகள் தொடர்பான உண்மையான விபரங்களை தாமும் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அதற்கமைய கடந்த 12.01.2026அன்று முல்லைத்தீவு மாவட்ட மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரனை நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேப்பாபிலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளின் விபரங்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே கேப்பாபிலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகள்தொடர்பான அதிகாரபூர்வ தரவுகளை தம்மிடம் கையளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்தார்.
அதற்கமைய 12.01.2026ஆம் திகதியிடப்பட்ட DSM/LAN/KEP/MPP/2025/21ஆம் இலக்க கடிதத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரால் கேப்பாபிலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகள்தொடர்பான அதிகாரபூர்வ தரவுகள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடமிருந்து பெறப்பட்ட கேப்பாபிலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகள்தொடர்பான அதிகாரபூர்வ தரவுகளை கடந்த 14.01.2026அன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதத்துடன் இணைத்து அனுப்பிவைத்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறு இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள கேப்பாபிலவு மக்களின் பூர்வீக வாழ்விடத்தை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கெள்ளுமாறும் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 18.01.2026அன்று கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, கேப்பாபிலவு மக்களின் காணிவிடுவிப்புத் தொடர்பான கோரிக்கைக்கடிதத்துடன் நாடாளுன்ற உறுப்பினர் ரவிகரனால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அந்தவகையில் பதினாறு ஆண்டுகளாகத் தமது சொந்த நிலத்தில் குடியேறக் காத்துக்கொண்டிருக்கும் கேப்பாபிலவு மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் குடியிருக்கச்செய்வதற்கு தேவையான உத்தரவுகளையும், உரிய நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு குறித்த ஜனாதிபதிக்கான கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினரால் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 14.01.2026அன்று நாடாளுமன்ற உறுபினர் ரவிகரன் கேப்பாபிலவு காணிவிடுவிப்புத் தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டி ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பிரதேசத்திலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பானது எனத் தலைப்பிடப்பட்டுள்ள PS/DA/SAD/06/41-Vol.01ஆம் இலக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
மேற்குறித்த விடயம் தொடர்பாக வன்னி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு, துரைராசா ரவிகரன் அவர்களால் கௌரவ சனாதிபதி அவர்களுக்கு அனுப்பப்பட்ட 2026.01.14 திகதிய கடிதம் தொடர்பானது. (பிரதி இணைக்கப்பட்டுள்ளது.)
அந்த கடிதத்தின் மூலம், முல்லைத்தீவு கேப்பாபிலவு பிரதேசத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களால் மாதாந்தம் இந்த அலுவலகத்திற்கு அனுப்பப்படும் காணி விடுவிப்பு பற்றிய முன்னேற்றம் தொடர்பான ஆவணத்தை ஆய்வு செய்தபோது, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காணிகள் தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருப்பது அவதானிக்கப்படுகின்றது.
அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பிரதேசத்தில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விரிவான ஒரு அறிக்கையை பாதுகாப்புப் பிரிவினரிடம் வினவுதல்களை மேற்கொண்டு உடனடியாக அனுப்பி வைக்குமாறு தயவுடன் அறியத்தருகின்றேன் – எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இக் கடிதம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தகவலுக்காகப் பிரதியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதது.

