முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தங்கள் செய்யப்படாது

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தங்கள் செய்யப்படாதென அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
செபெட்கோ மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் எரிபொருள் விலைகளை நேற்று நள்ளிரவுமுதல் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 293 ரூபாவாகும்.
361 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 341 ரூபாவாகும்.
இதேவேளை 286 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 274 ரூபாவாகும்.
அத்துடன், 331 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.
மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 178 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள சூழலில் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர். என்றாலும், முச்சக்கர வண்டி தொழிற்சங்கங்கள் கட்டணக் குறைப்புக்கு இடமில்லை என அறிவித்துள்ளன.