Uncategorized காணொளி சிறப்புச் செய்தி 

தேசத்தின் புதல்வி துவாரகா அவர்கள் திருகோணமலை குச்சவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆற்றிய உரை

தேசத்தின் புதல்வி துவாரகா அவர்கள் நேற்றைய தினம் திருகோணமலை குச்சவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆற்றிய உரை 

இது தேசத்தின் புதல்வி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் ஆகும்:

 

 

‘எனது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,

இன்று மாவீரர் நாள்.

தமிழீழ மண்ணில் மட்டுமன்றி, உலகெங்கும் இன்று தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கின்றது என்றால் அதற்குக் காரணமானவர்கள் எமது மாவீரர்கள். தம்மையும், தமது வாழ்வையும் பற்றியே மட்டும் சிந்திக்கும் மனிதர்களின் மத்தியில் தமது மக்கள் வாழ வேண்டும், எதிர்காலச் சந்ததி தலைநிமிர்ந்து நிற்க வேண்டும், தமிழ்த் தாயின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்ற உன்னத சிந்தனையோடு தம்மையே ஈகம் செய்தவர்கள் எமது மாவீரர்கள். தமது உயிரையே வேலியாக்கி, எமது மண்ணையும், மக்களையும், மொழியையும் காத்த அந்த அற்புதப் பிறவிகள் மண்ணிலும், கடலிலும், வான்வெளியிலும் புரிந்த சாதனைகளை வெறும் வார்த்தைகளால் நாம் வடித்து விட முடியாது.

அந்த வீரப் புதல்வர்களையும், வீரப் புதல்விகளையும் ஈன்றெடுத்த அவர்களின் பெற்றோர் என்றென்றும் போற்றுதற்குரியவர்கள். ஒவ்வொரு தாயும் தனது குழந்தையை ஈன்றெடுக்கும் போது, தனது குழந்தை உலகம் போற்றும் ஒருவராக வளர வேண்டும் என்பதே அந்தத் தாயின் எதிர்பார்ப்பாகும். ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தையைத் தோளில் சுமந்து வளர்க்கும் போது, தனது குழந்தை தனது பெயருக்குப் பெருமை சேர்க்கும் என்பதே அந்தத் தந்தையின் நம்பிக்கையாகும். அவையெல்லாவற்றையும் தாண்டி மாவீரர்களாக, ஒரு சகாப்தத்தைப் படைத்த சரித்திர நாயகர்களாக, ஒட்டுமொத்தத் தமிழினமும் போற்றும் வீர மறவர்களாக நீங்கள் ஈன்றெடுத்த பிள்ளைகள் மிளிர்கின்றார்கள். எமது தேசத்தின் ஆன்ம பலமாக, வழிகாட்டிகளாக விளங்கும் மாவீரர்களின் பெற்றோராகிய உங்களுக்கு நான் தலை வணங்குகின்றேன்.

அது போன்று எமது மாவீரர்களை தமது வாழ்க்கைத் துணைவர்களாக வரித்துக் கொண்ட மண இணையர்கள் அனைவருமே மதிப்பளிக்கப்பட வேண்டியவர்கள். உங்கள் வாழ்வின் இன்ப, துன்பங்களில் பங்கு கொள்வதற்கு உறுதி பூண்ட உங்கள் வாழ்க்கை துணைவர்கள், இன்று வீர மறவர்களாகத் தமிழீழத் தாயின் மடியில் மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தாலும் அவர்களின் ஆன்ம பலம் என்றுமே உங்களுக்கும், உங்களின் பிள்ளைகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.

அந்த மாவீரர்களின் உடன்பிறப்புகளாகப் பிறந்தவர்களும், அவர்களின் உறவினர்கள், உரித்துடையோராக வாழ்வோரும் என்றுமே பெரும் பேறு செய்தவர்கள்.

எனது அன்பார்ந்த மக்களே,

எமது மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோரையும், தமது இளமைக் காலத்தின் சுகங்களைத் துறந்து களமாடிய எமது முன்னாள் போராளிகளையும், மக்களையும் கைவிட்டு எமது தலைமை சென்று விடவில்லை. முள்ளிவாய்க்காலில் வெறும் ஆயுதங்களை மட்டும் மௌனிப்பதற்கு எமது விடுதலை இயக்கம் நிர்ப்பந்திக்கப்பவில்லை. எமது குரல்களையும் மௌனிப்பதற்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். எமது விடுதலை இயக்கத்தின் ஆயுதங்களோடு, எமது குரல்களும் மௌனமாகி, அஞ்ஞாதவாச நிலைக்கு நாம் சென்றால் மட்டுமே எமது மக்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்ற நிர்ப்பந்தத்திற்குள் உலக சமூகம் எமது தலைமையைத் தள்ளியது.

நாம் மௌன நிலைக்குச் சென்றாலும், எமது தலைமையால் புலம்பெயர் தேசங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளும், எமது தேசத்தின் சொத்துக்களை நிர்வகித்தவர்களும் எமது மக்களையும், மாவீரர் குடும்பங்களையும், முன்னாள் போராளிகளையும் கைவிடப் போவதில்லை என்று நாம் திடமாக நம்பினோம். ஒரு பக்கம் உலக சமூகம் எம்மீது திணித்த அழுத்தம், மறுபக்கம் எமது அமைப்புகள் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கை ஆகிய இரண்டுமே எம்மை ஒரு தசாப்தத்திற்கு மேலான மௌன நிலைக்கு இட்டுச் சென்றது.

எமது தேசத்தைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பி எமது மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டிய எமது புலம்பெயர் அமைப்புகளும், எமது தேசத்தின் சொத்துக்களை நிர்வகிப்போரும் தமது கடமையில் இருந்து தவறி இருப்பதையே எமது மக்களும், மாவீரர் குடும்பங்களும், முன்னாள் போராளிகளும் இன்றும் எதிர்நோக்கும் இன்னல்கள் உணர்த்துகின்றன. இந்த நிலையை மாற்றியமைத்து எமது தேசத்தைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் மனிதநேயப் பணிகளை முன்னெடுப்பதற்காகவே எனது அஞ்ஞாதவாசத்தையும், மௌனத்தையும் 2023ஆம் ஆண்டு கலைத்து எனது இருப்பை நான் வெளிப்படுத்தினேன்.

எமது தேசத்தைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு ஏறத்தாள மூன்று ஆண்டுகளாக நான் எடுத்த முயற்சிகளுக்கு இடையூறு விளைவித்து, எனது இருப்பை மறுதலிக்கும் நாசகார வேலைகளையே எமது மக்களுக்காக உருவாக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகளும், எமது தேசத்தின் சொத்துகளைக் கபளீகரம் செய்து வைத்திருப்போரும் புரிந்து வருகின்றனர். ஆனாலும் எமது மக்களின் துயர் துடைத்து, மாவீரர் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வை மேம்படுத்தும் மனிதநேயப் பணிகளை முன்னெடுப்பதற்கு நான் உறுதிபூண்டுள்ளேன்.

அரசியல் என்பது வெறுமனவே ஊர்வலங்கள் நடத்துவதும், மேடைகளில் முழங்குவதும், பரப்புரைகளின் பெயரில் மூடப்பட்ட அறைகளுக்குள் மாயாஜாலம் புரிவதும் அல்ல. எனது தந்தையாகி எமது தேசியத் தலைவரின் வார்த்தைகளில் கூறுதாயின், அரசியல் என்பது மக்களின் வாழ்வை மேம்படுத்த ஆற்றப்படும் மனிதநேயப் பணியாகும். ஆதி காலத்தில் எமது மூதாதையர்கள் அரசுகளைத் தோற்றுவித்ததன் பிரதான நோக்கமே இது தான்.

அமைதி வழி தழுவி, ஜனநாயக விழுமியங்களுக்கு இசைவாக நான் முன்னெடுக்க இருக்கும் மனிதநேயப் பணிகளுக்கு இத்தீவின் இன்றைய ஆட்சியாளர்கள் இடையூறாக இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சிகளை நிகழ்த்திப் பின்னர் ஜனநாயக நீரோட்டத்தின் ஊடாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய எமது சிங்களச் செந்தோழர்கள், மென்வழி தழுவிய எனது மனிதநேயப் பயணம் பற்றி அச்சமடையத் தேவையில்லை.

நாம் என்றுமே சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. தமது சொந்த மண்ணில், புத்தபிரானின் காருண்யப் போதனைகளுக்கு அமைவாக, அமைதியான முறையில் சிங்கள மக்கள் வாழ்வதற்கு நாம் ஒரு போதும் இடையூறு விளைவிக்கப் போவதில்லை.

அது போன்று தமிழீழ மக்களும் தமது சொந்த மண்ணில், தமது பண்பாட்டு விழுமியங்களையும், மொழியையும் பேணி அமைதியான வாழ்வையே வாழ விரும்புகின்றார்கள் என்பதையும் எமது சிங்கள சகோதர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது மண்ணில், தன்னாட்சி உரிமையோடு நாம் வாழ விரும்புவது இனரீதியான பிரிவினைவாதத்தின் வெளிப்பாடு அல்ல. எமது மண்ணில் தமது இறைமையைத் தமிழீழ மக்கள் பிரயோகிக்க விரும்புவது என்பது சிங்கள மக்களின் இறைமையைப் பறித்தெடுக்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல என்பதை எமது சிங்களச் சகோதரர்களும், இத்தீவின் இன்றைய ஆட்சியாளர்களாகிய செந்தோழர்களும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

தமிழீழ தாயக மண்ணில் எமது மக்களின் வாழ்வை மேம்படுத்தும் ஒரேயொரு நோக்கத்துடன் மென்வழி தழுவி நான் முன்னெடுக்க இருக்கும் மனிதநேயப் பணிகள் எமது தந்தையர் பூமியாகிய பாரத தேசத்திற்கு ஒரு போதும் விரோதமாக அமையாது. இதனைப் பாரதப் பேரரசின் ஆட்சியாளர்களும், கொள்கை வகுப்பாளர்களும் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று வாழ்ந்த சங்கத் தமிழர்களின் வழிவந்த நாம் எந்தவொரு உலக நாட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல. உலக மக்களோடு ஒத்திசைவாக வாழ விரும்பும் எமது மக்களின் அரசியல் வேட்கையைப் புரிந்து கொண்டு எனது மனிதநேய முயற்சிகளுக்கு உலக சமூகம் அனுசரணை வழங்கும் என்ற அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு.

எனது அன்பார்ந்த மக்களே,

எமது மாவீரர்களின் வீரமும், ஈகமும் ஒரு நாளும் வீண்போகாது. எமது காவல் தெய்வங்களின் ஆன்ம பலத்தோடு எமது தேசத்தைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பி, எமது எதிர்காலத் தலைமுறைக்கு மகிழ்வான வாழ்வைக் கையளிப்போம் என உறுதிபூணுவோமாக.’
8:54 am

Leave a Comment